"அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது" (உன்னதப்பாட்டு 1:2).
மணவாட்டி தனது உண்மையற்ற தன்மையினால் தன் நேசரின் பிரசன்னத்தை அவள் இழந்து வெகுநாட்களாகி விட்டதால் அவரின் பரிசுத்தமான அன்பை எண்ணி ஏங்குகிறாள்!
கிறிஸ்துவின் சீடனாக அழைக்கப்பட்டவன், தன் உலக யாத்திரையில் நடந்து செல்லுகையில், அவனது பின்மாற்றத்தால், அவரது அடிச்சுவடிகளை கண்டு கொள்ள முடியாமல் வழிமாறிப் போகிறான்! ஆகவே நேசரின் அன்பான ஆறுதலான இனிய வார்த்தைகளை நினைத்து நினைத்து வேதனைப்படுகிறான். அவரது நேசம் திராட்சைரசத்தைப் பார்க்கிலும் மதுரமானது என்று கண்ட அனுபவம் இருக்கிறதே?
அவர் தன்னை முத்தமிடமாட்டாரா என சீடன் ஏங்குகிறான். இதன் ஆவிக்குரிய பொருள், கிறிஸ்துவின் அன்பான வார்த்தைகள் திரும்ப தனக்கு கிடைக்காதா என்ற ஏக்கம்!
பின்வாங்கிப்போனாலும் அதைக்குறித்து மனஸ்தாபப்பட்டு திரும்பவும் அவரது அன்பைப் பெற்றுக்கொள்ளத் துடிக்கும் சீடனை, மறுபடியும் மன்னித்து, அன்பைப் பொழியும்படி கோபமான வார்த்தைகளை அல்ல, அன்பின் வார்த்தைகளையே பேசுகிறார்! உதாரணமாக, கெட்டகுமாரன் உலகமாயையில் சிக்கி தகப்பனை விட்டு தானாகவே வீட்டைவிட்டு வெளியே வந்தான். ஆஸ்திகள் எல்லாம் அழிந்தது. பட்டினி இருக்க நேரிட்டது. அப்போழுது தகப்பனின் அன்பையும், ஆதரவையையும், அரவணைப்பையும், எண்ணி ஏங்கினான். தகப்பனிடத்தில் திரும்ப ஓடி வந்தான். அவர் அவன் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டவில்லை! ஆக்கினை தீர்ப்பு கொடுக்கவில்லை. தூரத்தில் வீடு நோக்கி திரும்பி தள்ளாடி வருகிற மகனைக் கண்டு ஓடோடியும் வந்து அவனை அணைத்து முத்தமிடடார்.
உலகத்தின் திராட்சைரசம் ஒருவனுக்கு அற்ப சந்தோஷத்தை இருதயத்திற்கு கொட்டுக்குமானால் ஆண்டவரின் நேசம் எத்தனை மடங்கு அதிகமான நிரந்தர சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடும்! அவரது அன்பு மாறாதது! அவரது நேசம் வலிமையானது!
".....நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்" (எபிரெயர் 12:1).
பாவமாகிய திராட்சைரசம் கட்டுப்படுத்தமுடியாத பாவ சந்தோஷத்தை மாம்சத்தில் கொடுக்கலாம். இது பிசாசு தருகிற ஏமாற்றம். ஆனால் நித்தியத்திக்குரிய திராட்சைரசம் கிறிஸ்துவின் ஐந்து காயங்களிலிருந்தும் பொங்கி பாய்ந்து வருகிற அவரது பரிசுத்த இரத்தம் - பிதாவின் சிங்காசனத்துக்கு முன் நின்று உன்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடுகிறது. இந்த நித்திய திராட்சைரசம் உனக்கு எத்தனை பெரிதான சந்தோஷத்தை நித்திய காலமாக உன் ஆத்துமாவில் கொடுக்கமுடியும். ரோமர் 8:32-33 ஐ படிக்கவும்.
Author Name: T. Job Anbalagan
(மொழியாக்கம் by Caroline Jeyapaul)